அடிக்கல் நாட்டு விழா – எடப்பாடி பழனிச்சாமி

  சென்னை, காமராஜர் சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவுக்கான அடிக்கல்லை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாட்டினார்.

                மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா, மதுரையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்டு, திண்டுக்கல்லில் டிசம்பர் மாதம் நிறைவடைந்தது. இந்நிலையில், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி, சென்னையில் அவரது நினைவாக நூற்றாண்டு விழா வளைவு அமைக்கப்படும் என்று சட்டப் பேரவையில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். இதன்படி, சென்னை காமராஜர் சாலையில் உள்ள பொதுப்பணித் துறை அலுவலகம் அருகே, எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா வளைவுக்கு அடிக்கல் நாட்டு விழா இன்று காலை நடைபெற்றது.சட்டப் பேரவைத் தலைவர் பி.தனபால் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு, எம்.ஜி.ஆர். நூற்றாண்டு வளைவுக்கான அடிக்கல்லை நாட்டினார். இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நூற்றாண்டு விழா வளைவு அழகிய கலைநயம் மற்றும் சிற்ப வேலைப்பாடுகளுடன் சுமார் 66 அடி அகலமும், 52 அடி உயரமும் கொண்டதாக அமைக்கப்பட உள்ளது. சென்னை கடற்கரை சாலையில் அமைக்கப்படும் இரண்டாவது வளைவு இதுவாகும். ஏற்கெனவே, சட்டப் பேரவை வைர விழா வளைவு, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் கடந்த 2013-ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Posts