அடுத்து சந்திராயன் -3 : இஸ்ரோ தலைவர் சிவன்

சந்திராயன் -3 விண்கலத்தை நிலவுக்கு செலுத்துவதற்கு திட்டமிட்டு வருவதாக இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சந்திராயன்- 2 தற்போது நிலவை நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகிறது என்றார். இனி வரும் நாட்களில் நீளவட்டப் பாதை சுற்றுவட்டப்பாதையாக சுருக்கப்படும் என குறிப்பிட்ட அவர், செப்டம்பர் 7ம் தேதி அதிகாலை 1.40 மணிக்கு சந்திராயன் -2 நிலவில் தரையிறங்கும் முயற்சியை ஆரம்பிக்கும் என்று தெரிவித்தார். நிலவில் சந்திராயன்- 2 லேண்டர் தரையிறங்கும் போது சந்திராயன் 2ன் வேகம் முற்றிலும் குறைக்கப்பட்டு நிலைநிறுத்தப்படும் என்று அவர் கூறினார். சந்திராயன் -3 விண்கலத்தை நிலவுக்கு செலுத்துவது குறித்து இஸ்ரோ திட்டமிட்டு உள்ளதாகவும் அவர் கூறினார்.

சந்திராயன்- 2 நிலவில் தரையிறங்குவதை பார்வையிட மோடிக்கு அழைப்புக்கு விடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். சூரியன், செவ்வாய், வியாழன், கோள்களை ஆய்வு செய்ய எதிர்காலத்தில் செயற்கை கோள்கள் அனுப்ப திட்டமிடப்படும் என்று அவர் தெரிவித்தார். இஸ்ரோவில் ஆண்கள் பெண்கள் என்ற வித்தியாசம் கிடையாது, திறமையானவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்று உறுதிபடத் தெரிவித்த சிவன், வரும் காலங்களில் செயல்படுத்தப்படும் திட்டங்களில் பெண்கள் தலைமை வகிக்க வாய்ப்புகள் உண்டு என்றார்.

Related Posts