அடுத்த ஓர் ஆண்டில் 22 லட்சம் பேருக்கு அரசு வேலை: ராகுல் காந்தி வாக்குறுதி

ராஜஸ்தானில் உள்ள 25 மக்களவைத் தொகுதிகளுக்கு வரும் 29 மற்றும் மே 6 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. அதையொட்டி, அந்த மாநிலத்தில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பினேஸ்வர் தாம் பகுதியில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், கடந்த 5 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பாஜக, மக்களுக்கு துரோகம் இழைத்து விட்டதாகவும்,  அதிலும், பழங்குடியின மக்களுக்கு அதிக அளவில் அநியாயம் இழைத்துள்ளதாக  தெரிவித்தார்.

அடுத்த 5 ஆண்டுகளில் மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என தான் நினைப்பதாக குறிப்பிட்ட அவர், கடந்த 2014-ஆம் ஆண்டு தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகள் எதையும் அவர் நிறைவேற்றவில்லை என்று கூறினார்.

துல்லியத் தாக்குதல் குறித்து பாஜகவினர் பேசுவதாக கூறிய அவர், ஆனால் நாங்கள் வறுமைக்கு எதிராக துல்லியத் தாக்குதல் நடத்தவிருப்பதாக தெரிவித்தார்.

கடந்த தேர்தலின்போது,  2 கோடி வேலைவாய்ப்பு, ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் 15 லட்சம் டெபாசிட் என்று வாயில் வந்ததெல்லாம் வாக்குறுதியாக அளித்த மோடி எதையும் நிறைவேற்றவில்லை என்றார். அடுத்த ஒரே ஆண்டில் நிச்சயம் 22 லட்சம் பேருக்கு அரசுப் பணிகள் வழங்கப்படும் எனவும் பஞ்சாயத்து அளவில் 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Related Posts