அடையாறு, கூவம் பகுதிகளில் வெள்ள தடுப்பு பணிகளுக்கு ரூ. 100 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்

சென்னையில் அடையாறு, கூவம் பகுதிகளில் வெள்ள தடுப்பு பணிகளுக்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை : ஜூன்-29

தமிழக சட்டசபையில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், வடகிழக்கு பருவமழை காலங்களில் ஏற்படும் வெள்ளப் பெருக்கின் போது, அடையாறு, ஆரணியாறு, கொசஸ்தலையாறு, கூவம், கோவளம் ஆகிய ஆறுகளில் இருந்து வெளியேறும் நீரால், சென்னை மாநகராட்சி மற்றும் புறநகர் மற்றும் ஊரக பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் மூழ்கும் நிலைமை ஏற்படுவதாக தெரிவித்தார். அப்பகுதிகளில் வெள்ள தணிப்புப் பணிகள் மேற்கொள்வதற்காக நடப்பாண்டில் மாநில நிதியிலிருந்து 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்று முதலமைச்சர் கூறினார். இதன் மூலம், மூடிய கால்வாய்களை புனரமைத்தல், பாசனமில்லாத ஏரிகளை ஆழப்படுத்தி நீர்த் தேக்கங்களாக மாற்றுதல், உபரி நீர் கால்வாய்கள் மற்றும் சாலையோர கால்வாய்களை அகலப்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார்.

மேலும், பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் அமைந்துள்ள அருங்காட்சியகத்தை புதுப்பித்தல், பதிக்கப்பட்டுள்ள கிரானைட் கற்களை புதுப்பித்தல், புல்வெளி சீரமைத்தல் உள்ளிட்டவை 4 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

பத்திரிகையாளர் பெற்று வரும் ஓய்வூதியத்தை 8 ஆயிரம் ரூபாயிலிருந்து 10 ஆயிரம் ரூபாயாகவும், குடும்ப ஓய்வூதியத்தை 4 ஆயிரத்து 750 ரூபாயிலிருந்து 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி கடந்த ஆண்டு வழங்கப்பட்டதாக முதலமைச்சர் தெரிவித்தார். மேலும் ஓய்வூதியம் பெறுவதற்கான பணிக்கெடையின் உச்சவரம்பு மற்றும் பணிக்கால ஆண்டு வருமான உச்சவரம்பு 2 லட்சம் ரூபாயிலிருந்து 3 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். பணிக்காலத்தில் பத்திரிகையாளர்கள் கடுமையான நோயினால் பாதிக்கப்பட நேர்ந்தால், அவர்கள் சிகிச்சை மேற்கொள்ள ஏதுவாக பத்திரிகையாளர் நல நிதியம் மூலம் தற்போது வழங்கப்பட்டு வரும் 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவி ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Related Posts