அணு ஆயுத பரிசோதனை கூடத்தை தகர்த்தது வடகொரியா

அமெரிக்காவுக்கு அளித்த வாக்குறுதியின்படி, அணு ஆயுத பரிசோதனை கூடத்தை தகர்த்துள்ள வடகொரியா, தற்போதும் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக கூறியுள்ளது.

வடகொரியா : மே-25

அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் நாடுகளை அச்சுறுத்தும் வகையில் தொடர்ந்து, அணு ஆயுத சோதனையை நடத்தி வந்த வடகொரியா, ஐ.நா. மற்றும் அமெரிக்காவின் தொடர் வலியுறுத்தலை அடுத்து, அணு ஆயுத சோதனையை நிறுத்த முன்வந்தது. இதையடுத்து, வரும் ஜூன் 12ஆம் தேதி சிங்கப்பூரில், அமெரிக்க அதிபர் டிரம்பும், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னும் சந்தித்து, அமைதிப்பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இரு நாடுகளுக்கிடையே வார்த்தைப் போர் முற்றி வந்ததால் பேச்சுவார்த்தை ரத்து செய்யப்படுவதாக நேற்று அமெரிக்கா அதிகாரப் பூர்வமாக அறிவித்தது. இதனால், அணு ஆயுத பரிசோதனை கூடத்தை தகர்க்கும் முடிவை வடகொரியா கைவிடக்கூடும் என கருதப்பட்ட நிலையில், அமெரிக்காவுக்கு அளித்த வாக்குறுதியின்படி, தனது அணு ஆயுத பரிசோதனை கூடத்தை, வடகொரியா வெடிவைத்து தகர்த்தது. புங்யே ரி பகுதியில் மலைகளை குடைந்து அமைக்கப்பட்ட ரகசிய சுரங்கத்தையும், அணு ஆயுத சோதனைக் கூடத்தையும் வடகொரியா தகர்த்து, மூடியுள்ளது. மேலும், அமெரிக்க அதிபர் டிரம்ப் உடனான பேச்சுவார்த்தைக்கு தற்போதும் தங்கள் தரப்பு தயாராக இருப்பதாக வடகொரியா வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

Related Posts