அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏ பிரபுவுக்கு பேரவைத் தலைவர் அனுப்பிய நோட்டீசுக்குஉச்சநீதிமன்றம் இடைக்கால தடை 

அ.தி.மு.க. கொறடா ராஜேந்திரன் பேரைவைத் தலைவர் ப.தனபாலிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக செயல்படும் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் ரத்தின சபாபதி, கலைச்செல்வன், பிரபு  ஆகிய 3 பேர் மீதும் கட்சித்தாவல் தடை சட்டத்தின்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.  இந்த புகாருக்கு 7 நாட்களுக்குள் நேரில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறி 3 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் பேரவைத் தலைவர் ப.தனபால் கடந்த மாதம் 30-ந் தேதி நோட்டீஸ் அனுப்பினார். அவர் நோட்டீஸ் அனுப்பிய அன்றைய தினமே  தி.மு.க. சார்பில், பேரவைத் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது தொடர்பாக சட்டசபை செயலாளரிடம் மனு அளிக்கப்பட்டது.  இந்நிலையில், பேரவைத் தலைவர் அனுப்பிய நோட்டீசுக்கு தடை விதிக்க கோரி  ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் கடந்த வாரம்  மனு ஒன்றை தாக்கல் செய்தனர். இந்த மனுவை ஏற்று கொண்ட  நீதிபதிகள்,  2 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் பேரவைத் தலைவர் அனுப்பிய நோட்டீசுக்கு இடைக்கால தடை விதித்தனர். அத்துடன், மனுவிற்கு பதில் அளிக்க பேரவைத் தலைவர் ப.தனபாலுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர். இதை தொடர்ந்து பேரவைத் தலைவர்  அனுப்பிய நோட்டீசுக்கு எதிராக கள்ளக்குறிச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பிரபு உச்சநீதிமன்றத்தில் தனியாக மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள்,  பிரபுவுக்கு பேரவைத் தலைவர் அனுப்பிய நோட்டீசுக்கு இடைக்கால தடை விதித்தனர். ஜூலை 12 ம் தேதிக்குள் பேரவைத் தலைவர் ப.தனபால் பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை  ஒத்தி வைத்தனர்.

Related Posts