அதிமுக அமைச்சரவை, சுற்றுலா அமைச்சரவையாக செயல்படுகின்றது : ஸ்டாலின் குற்றம்சாட்டு

அதிமுக அமைச்சரவை, சுற்றுலா அமைச்சரவையாக செயல்படுகின்றது என திமுக தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஏற்கனவே நடந்த, 2 உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் வந்த முதலீடுகள் குறித்து, வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தினார். எடப்பாடி பழனிசாமி தலைமையில் இருக்கும் அமைச்சரவையை, அதிமுக அமைச்சரவை என்று சொல்ல முடியாது,. சுற்றுலா அமைச்சரவைதான் என்று சொல்லவேண்டிய நிலையில் இந்த ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது என்றும் அவர் விமர்சித்தார்.

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் யார் போட்டி என்பது குறித்து, தேர்தல் தேதி அறிவித்த பின் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் எனவும் ஸ்டாலின் கூறினார். முன்னதாக மாமன்னர் பூலித்தேவரின் 304-வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு, நெல்லை மாவட்டம் நெற்கட்டு செவலில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அவர் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவுக்கே பெருமை சேர்க்கும் வகையில் வாழ்ந்து காட்டியவர் பூலித்தேவர் என ஸ்டாலின் புகழாரம் சூட்டினார்.

Related Posts