அதிமுக ஆட்சியில் 2 லட்சம் கோடிக்கு மேல் முதலீடுகள் : முதலமைச்சர்

அதிமுக ஆட்சியில் இரண்டு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக ஆட்சியில் பல்வேறு துறைகளில், 2 லட்சம் கோடிக்கு ரூபாய்க்கும் மேல் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது என்றார். 53 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிற்கு தொழில் முதலீட்டின் மூலம் தொழில்கள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

காவிரி ஆற்றில் கொள்ளிடம் வரை மேலும் மூன்று தடுப்பணைகள் கட்ட ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார். தமிழகத்தில் நீர் மேலாண்மை மேற்கொள்ளவும், உபரி நீரை சேமிக்கவும் தனியாக குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.

மோட்டார் வாகன சட்டம் கடுமையாக இருந்தால் தான் குற்றங்கள் தடுக்கப்படும் என்ற முதலமைச்சர், மத்திய அரசின் சட்டத்தை பரிசீலனை செய்து முறையாக அமல்படுத்தப்படும் என்று உறுதியளித்தார். தமிழகத்தில் பொருளாதார நெருக்கடி இல்லை எனவும், தொழில் தொடங்க உரிய மாநிலம் தமிழ்நாடு என்றும் அவர் தெரிவித்தார். தமிழகத்தில் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவையை செயல்படுத்த உள்ளதாகவும் முதலமைச்சர் பழனிசாமி கூறினார்.

Related Posts