அத்திவரதர் தரிசனத்தை மேலும் நீட்டிக்க முடியாது : உயர்நீதிமன்றம்

அத்திவரதர் தரிசனத்தை மேலும் நீட்டிக்க முடியாது எனத் தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், தரிசனத்தை நீட்டிக்க கோரி தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரம் வரதராஜர் கோவிலில் நடைபெற்று வரும் அத்திவரதர் வைபவம் நாளை ஆகஸ்ட் 17ம் தேதியுடன் நிறைவடைகிறது.

இந்நிலையில் அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்கக் கோரி, சென்னை பெரம்பூரை சேர்ந்த தென் இந்திய இந்து மகா சபா தலைவர் வசந்தகுமார், உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில் அத்திவரதரை 48 நாட்களுக்கு பின் மீண்டும் குளத்தில் வைக்க வேண்டும் என எந்த ஆகம விதியும் இல்லை என தெரிவித்த அவர், எனவே தரிசனத்தை நீட்டிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதரார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், எந்தவித ஆகம விதிகளும் இல்லாததால் அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்க வேண்டும் என வாதிட்டார்.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், அத்திவரதர் சிலை கோவில் ஆகம விதி நடைமுறைப்படி, 48 நாட்களுக்கு பின் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்படுவதில் எந்த விதமான மாற்றமும் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்தார்.

கால அளவை நீட்டிக்க வேண்டும் என மனுதாரர் அரசை நிர்பந்திக்க முடியாது எனவும் அவர் வாதிட்டார்.

மேலும் ஏற்கனவே இதே நடைமுறைகள் தான் பின்பற்றப்பட்டுள்ளதாக தெரிவித்த அரசு தரப்பு வழக்கறிஞர், அதற்கான ஆவணங்கள் மற்றும் கல்வெட்டுகள் உள்ளது எனக் கூறி, ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.

இந்த விஷயத்தில் உரிய நடைமுறைகள் படிதான் அரசு செயல்படுவதாகவும், எனவே தரிசனத்தை நீட்டிக்க உத்தரவிட முடியாது எனவும் வாதிட்டார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கோவில் மரபு, வழிபாட்டு நடைமுறைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது எனக் கூறினர்.

மேலும் கோவில் நிர்வாகமும், அரசும் தான் இது தொடர்பாக முடிவெடுக்க வேண்டும் எனக் கூறிய நீதிபதிகள், அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக் வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது என தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Related Posts