அத்தி வரதர் சிலை வைக்கப்படவுள்ள குளம் தூர்வாரப்படுவது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் : உயர்நீதிமன்றம் உத்தரவு

அத்தி வரதர் சிலை வைக்கப்படவுள்ள குளம் தூர்வாரப்பட்டு சுத்தமாக உள்ளதா என்பதை ஆய்வு செய்ய அறிக்கை தாக்கல் செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்றம் அரசு வழக்கறிஞருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் அனந்தசரஸ் குளத்தில் இருந்து அத்திவரதர் சிலை 40 ஆண்டுகளுக்குப்பிறகு வெளியில் எடுக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனத்துக்காக வைக்கப்பட்டுள்ளது. அந்த சிலை குளத்தில் இருந்ததால் குளத்தை அதிகாரிகள் முறையாக தூர்வாரவில்லை.அத்திவரதர் சிலை குளத்திற்கு வெளியே எடுக்கப்பட்டுள்ள இந்த காலகட்டத்தில் குளத்தை ஆழமாக தூர்வாரி சுத்தம் செய்ய உத்தரவிட வேண்டும் வேண்டும் என   சென்னை உயர்நீதிமன்றத்தில் அசோகன் என்பவர் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி பி.டி.ஆதிகேசவலு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தரப்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘அத்திவரதர் சிலையை அனந்தசரஸ் குளத்தில் இருந்து எடுப்பதற்கு முன்பு, அங்கிருந்த நீரை மீனுடன் சேர்த்து பொற்றாமரைக்குளத்திற்கு மாற்றிவிட்டோம். அதன்பிறகு அனந்தசரஸ் குளத்தில் இருந்த அனைத்து கழிவுகளும் அப்புறப் படுத்தப்பட்டு, முறையாக சுத்தம் செய்யப்பட்டுள்ளது. தற்போது அனந்தசரஸ் குளத்திற்கு யாரும் செல்லக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து நீதிபதி பி.டி.ஆதிகேசவலு, ‘அத்திரவரதர் சிலை வைக்கப்பட உள்ள அனந்தசரஸ் குளம் தூர்வாரி சுத்தம் செய்யப்பட்டுள்ளதா? என்பதை இந்து சமய அறநிலையத்துறை சிறப்பு அரசு பிளடர் எம்.மகாராஜா, அரசு சிறப்பு வழக்கறிஞர் எம்.கார்த்திக்கேயன் ஆகியோர் நாளை நேரில் சென்று ஆய்வு நடத்த வேண்டும். பின்னர், அதுகுறித்த அறிக்கையை 8-ந் தேதி தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டார்.

Related Posts