அத்தி வரதர் வைபவம் சிறப்பாக நடைபெற உதவியவர்களுக்கு முதலமைச்சர் நன்றி

அத்தி வரதர் வைபவம் சிறப்பாக நடைபெற உதவிய காவல் மற்றும் உள்ளாட்சித் துறையினருக்கு நன்றி தெரிவித்துள்ள முதலமைச்சர், இரவும் பகலும் அயராது உழைத்த அனைத்து துறையினருக்கும் பாராட்டியுள்ளார்.

40 ஆண்டுகளுக்கு பின்னர் அருள்பாலித்த அத்திவரதர் இன்று குளத்துக்கு திரும்புகிறார். இந்த நிலையில், அதிமுக அரசின் விரிவான பாதுகாப்பு உள்ளிட்ட பல வசதிகளை செய்து கொடுத்ததன் காரணமாக, ஒரு கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் அத்திவரதரின் தரிசனம் பெற்றுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அத்தி வரதர் வைபவத்தை சிறப்பாக நடைபெற உதவிய காவல்துறை மற்றும் உள்ளாட்சித் துறையினருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

அத்தி வரதர் வைபம் நடைபெற்ற காலக் கட்டத்தில், இரவு 12 மணி முதல் அதிகாலை 4 மணிக்குள், கண்விழித்து தூய்மைப் பணிகளில் ஈடுபட்ட துப்பரவு பணியாளர்களின் பணி மிகவும் சிறப்பாக அமைந்ததாக குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், காஞ்சிபுரம் நகரில் வசிக்கும் இளைஞர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் இந்த 48 நாட்களும், வருகை தந்த பக்தர்களை வரவேற்று உபசரித்தது பாராட்டுக்குரியதாகவும் கூறியுள்ளார்.

அத்தி வரதரின் வைபவத்தினை சிறந்த முறையில் மக்களிடம் எடுத்துச் சென்ற பத்திரிகை மற்றும் ஊடகத் துறையினருக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தன்னலம் பாராமல், இரவும், பகலும் அயராது உழைத்திட்ட அனைத்து துறையினருக்கும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Related Posts