அத்துமீறி ஊடுருவிய ஹெலிகாப்டரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பிரதமர் பயணித்ததாக தகவல்

எல்லைக்கோட்டுப் பகுதியில் அத்துமீறி ஊடுருவிய ஹெலிகாப்டரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பிரதமர் பயணித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

            காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள இந்தியா – பாகிஸ்தான்  எல்லைக்கோட்டுப் பகுதியில் வழக்கம்போல் நேற்று இந்திய பாதுகாப்பு படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாகிஸ்தான் நாட்டின் வான் எல்லை வழியாக பறந்துவந்த ஹெலிகாப்டர் ஒன்று குல்பூர் செக்டர் அருகே இந்திய வான் எல்லைக்குள் 700 மீட்டர் தொலைவு அத்துமீறி ஊடுருவி சிறிது நேரம் வட்டமிட்டு பறந்தது. இந்த காட்சியை எல்லையில் உள்ள இந்திய வீரர்கள் வீடியோவாக பதிவு செய்து உயரதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். இதைத்தொடர்ந்து அத்துமீறிய அந்த வெள்ளை நிற ஹெலிகாப்டர் மீது இந்திய ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது. பின்னர் அது மீண்டும் பாகிஸ்தான் எல்லைக்குள் சென்றுவிட்டது. ஆனால், அந்த ஹெலிகாப்டர் பாகிஸ்தான் அரசுக்கு சொந்தமானதா? அல்லது தனியாருக்கு சொந்தமானதா எனும் தகவல் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில், எல்லையில் அத்துமீறி ஊடுருவிய ஹெலிகாப்டரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பிரதமர் ராஜா பரூக் ஹைதர் கான் பயணித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், எல்லையில் பாகிஸ்தான் அரசு அத்துமீறியதாக நினைத்து இந்திய ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும், ஆனால், உண்மையில் துப்பாக்கிச்சூடு நடந்த போது தங்களுடைய ஹெலிகாப்டர் எல்லையை தாண்டவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts