அனைத்து வயது பெண்களும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லலாம்

அனைத்து வயது பெண்களும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லலாம் என உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

            கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் குறிப்பிட்ட வயதுடைய பெண்கள் நுழைய தடை உள்ளது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில்  தொடரப்பட்ட பல மனுக்களை ஒரே வழக்காக இணைத்து தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஆர்.எப் நாரிமன், கன்வில்கர், சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. கேரள மாநில அரசு, தேவஸ்தான போர்டு, மத்திய அரசு, மத அமைப்புகள் இந்த வழக்கில் தனித்தனியாக பிரமாணப்பத்திரங்கள் தாக்கல் செய்திருந்தன.ஒரு மாநிலத்தின் பாரம்பரியம், மதரீதியான நம்பிக்கைகள் போன்றவற்றோடு அரசமைப்பு சட்டப்படி ஒரு பெண்ணின் உரிமையை தீர்மானிக்கும் இந்த வழக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. இந்நிலையில், இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது, தலைமை நீதிபதி உள்ளிட்ட 4 நீதிபதிகள் ஒத்த கருத்தையும், நீதிபதி இந்து மல்கோத்ரா மட்டும் மாற்று கருத்தை கொண்டிருந்தார். தலைமை நீதிபதி தனது தீர்ப்பில், “நீண்டகாலமாக பெண்கள் மீது பாகுபாடு காட்டப்படுகிறது எனவும், பக்தி என்பது பாலின பாகுபாட்டுக்கு அப்பாற்பட்டது எனவும் தெரிவித்தார். பெண்கள் என்பவர் ஆண்களுக்கு சமமானவர்களே.எனவும், பெண்களை தெய்வமாக வணங்கும் நாட்டில் பெண்கள் பலவீனமானவர்கள் அல்ல” எனவும் அவர் குறிப்பிட்டார். எனவே அனைத்து வயது பெண்களும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லலாம் என 4 நீதிபதிகளும் ஒரே தீர்ப்பாக வழங்கினர்.

Related Posts