அன்னிய செலாவணி மோசடி வழக்கு , சசிகலாவை 13ந் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் : எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு

ஜெ.ஜெ., ‘டிவி’க்கு, வெளிநாட்டில் இருந்து, ‘எலக்ட்ரானிக்’ உபகரணங்கள் வாங்கியதில், சசிகலா மற்றும் அவரது உறவினர் பாஸ்கரன் ஆகியோர், அன்னிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.இதுதொடர்பாக, அமலாக்கத்துறை அதிகாரிகள், ஜெ.ஜெ., ‘டிவி’ நிறுவனம் மற்றும் சசிகலா, பாஸ்கரன் ஆகியோர் மீது, சென்னை, எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில், ஐந்து வழக்குகள் தொடர்ந்துள்ளனர். இந்த வழக்குகளில், 2017 ஜூலையில், பாஸ்கரன் மீது, குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று, சசிகலா, பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது, குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய, 2018 நவம்பர், 30ல் நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என, பொருளாதார குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மலர்மதி உத்தரவிட்டார்.இதை எதிர்த்து, சசிகலா தரப்பினர், சென்னை உயர் நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், சசிகலாவை, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக ஆஜர்படுத்த உத்தரவிட்டது. இதன்படி, ஜனவரி, 29ல், சசிகலா ஆஜர்படுத்தப்பட்டார். அவர் மீது, இரு வழக்குகளில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
இந்நிலையில், இந்த வழக்குகள், இரு தினங்களுக்கு முன், மாஜிஸ்திரேட் மலர்மதி முன் விசாரணைக்கு வந்தன. அப்போது, குற்றவியல் விசாரணை சட்டத்தின் கீழ், சசிகலாவிடம் கேள்விகள் கேட்க வேண்டி இருப்பதால், அவரை, வரும், 13ல், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என, பெங்களூரு சிறை அதிகாரிகளுக்கு, நீதிபதி உத்தரவிட்டார்.

Related Posts