அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வீடு திரும்பினார்

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சிகிச்சைக்குப் பிறகு இன்று பிற்பகல் வீடு திரும்பினார்.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு நேற்று இரவு உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.. சிறுநீரக பாதை நோய்த்தொற்று காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கு பின்னர் அவர்    வீடு திரும்புவார் எனவும் மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இன்று காலை அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், மு.க.ஸ்டாலினுக்கு வலது தொடையில் இருந்த கட்டி சிறிய அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்பட்டதாகவும், இன்று பிற்பகல் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.இதன்படி மு.க.ஸ்டாலின் இன்று பிற்பகல் வீடு திரும்பினார்.  ஓரிரு நாட்கள் ஓய்வுக்கு பிறகு கட்சிப் பணிகளில் வழக்கம்போல் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.முன்னதாக இன்று காலை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று மு.க.ஸ்டாலின் உடல்நலம் குறித்து விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், ஸ்டாலின் உடல் நலத்துடன் இருப்பதாக கூறினார்.

Related Posts