அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையே உடன்பாடு

வட அமெரிக்கா தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தில் மாற்றம் செய்வது தொடர்பாக அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

          அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளுக்கிடையே தடையில்லா வர்த்தகம் மூலம் பொருளாதார வளர்ச்சி பெறுவதற்காக கடந்த 1994ம் ஆண்டு  நாப்டா என அழைக்கப்படும் ‘வட அமெரிக்கா தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்பட்டது.  ஆனால் அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பின் இந்த வர்த்தக ஒப்பந்தத்தை எதிர்த்தார். மிக மோசமான ஒப்பந்தங்களில் இதுவும் ஒன்று எனவும், தற்போதையை சூழலில் நாப்டா ஒப்பந்தத்தால் அமெரிக்காவுக்கு எந்த நன்மையும் இல்லை எனவும் அவர்  தெரிவித்தார். மேலும் இந்த ஒப்பந்தத்தில் தனக்கு திருப்தியளிக்கும் வகையில் மாற்றங்கள் செய்யாவிட்டால் நாப்டா ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகும் என டிரம்ப் அறிவித்தார். இதையடுத்து மூன்று நாடுகளிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இந்நிலையில் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் கனடா புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் எனவும் தவறினால் இந்த ஒப்பந்தமானது அமெரிக்காவுக்கும் மெக்சிகோவுக்கும் இடையிலான இருதரப்பு ஒப்பந்தமாக மாற்றப்படும் எனவும் டிரம்ப் கெடு விதித்து இருந்தார்.

          இந்த கெடு முடிவதற்கு முன்னதாக, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையில் நேற்று இரவு அமைச்சரவை அவசரமாக கூடி இதுபற்றி ஆலோசித்தது. இந்த கூட்டத்தில் கனடாவின் நலன்களை பாதுகாக்கும் வகையில் புதிய ஒப்பந்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related Posts