அமெரிக்கா ஃப்ளோரிடா மாநிலத்தில் உள்ள அதிபர் டிரம்ப் வீட்டில் நுழைய முயன்ற சீனப்பெண் கைது


 அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாநிலத்தில், பால்ம் கடற்கரை பகுதியில் உள்ள  அமெரிக்க அதிபர் டிரம்புக்கு சொந்தமான மார்-எ-லாகோ பண்ணை வீட்டிற்கு சீனாவைச் சேர்ந்த யூஜிங் ஜங் கடந்த சனிக்கிழமை மதியம் நுழைய முயன்றார். அங்குள்ள சோதனைச் சாவடியில் இருந்த அதிகாரிகள் அந்தப் பெண்ணிடம் விசாரித்த போது,நீச்சல் குளத்திற்கு குளிக்க செல்வதாக கூறியுள்ளார். ஆனால் அவரது கைகளில் எவ்வித நீச்சல் உடைகளும் இல்லாததால் சந்தேகமடைந்த அதிகாரிகள் அந்தப்பெண்ணிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் அவர் தங்கியிருந்த விடுதிக்கு சென்று, வரவேற்பாளரிடம் விசாரித்தனர். அப்போது அந்தப்பெண் ஐக்கிய தேசிய சீன அமெரிக்க கூட்டுறவு சங்கத்தில் நடைபெறவிருக்கும் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள வந்துள்ளதாக கூறியுள்ளார். இதையடுத்து நடைபெற்ற விசாரணையில் அது  பொய் என்று தெரிய வந்ததையடுத்து   அந்தப்பெண்ணை  காவல்துறையினர்  கைது செய்தனர்.  மேலும், அவர் வைத்திருந்த உடமைகளை சோதனை செய்ததில், 2 சீன பாஸ்போர்ட்டுகள், வைரஸ் நிரம்பிய பென்டிரைவ் மற்றும் ஹார்ட் வேர், 4 செல்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட  சீனப் பெண்ணிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Related Posts