அமெரிக்கா, ஈரான் இடையே போர் பதற்றம்: விமானம் தாங்கி போர்க் கப்பலை அனுப்பிய டிரம்ப்

ஒபாமா அதிபராக  இருந்தபோது, ஏற்படுத்தப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகிக் கொள்வதாக தற்போதைய அதிபர் டிரம்ப், கடந்த ஆண்டு மே மாதம் 8-ந் தேதி அறிவித்தார். மேலும், ஈரான் மீது டிரம்ப் நிர்வாகம் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தது. இதனால் இருநாடுகளின் உறவில் விரிசல் ஏற்பட்டது. அமெரிக்காவின் தடைகளால் ஈரான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது.

இந்நிலையில், அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகி, ஓராண்டு நிறைவடைந்த நிலையில், நேற்று முன்தினம் ஈரான் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அணுசக்தி ஒப்பந்தத்தின் சில நிபந்தனைகளை தற்காலிகமாக புறக்கணிப்பதாக ஈரான் அதிபர் ஹசன் ருஹானி அறிவித்தார். அதாவது, ஒப்பந்தத்தின்படி தம்மிடம் உள்ள மிகுதியான செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை விற்க வேண்டும் என்ற நிபந்தனையை புறக்கணிப்பதோடு, நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமான யுரேனியத்தை செறிவூட்டும் பணியில் இனி ஈரான் ஈடுபடும்  எனவும் அதிபர் ஹசன் ருஹானி தெரிவித்தார்.  ஈரானின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக அந்நாட்டின் உலோக ஏற்றுமதி மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஈரான் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க தயங்க போவதில்லை என்று எச்சரிக்கை விடுத்தார். இதனை தொடர்ந்து  யுஎஸ்எஸ் ஆபிரஹாம் லிங்கன் என்ற அணுசக்தி விமானம் தாங்கி போர்க்கப்பலை ஈரான் கடற்பகுதிக்கு டிரம்ப் அனுப்பியுள்ளார். இந்நிலையில் அமெரிக்காவின் நிலைப்பாட்டிற்கு ஜெர்மனி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.  அமெரிக்கா – ஈரான் மோதல் போக்கு காரணமாக சர்வதேச சந்தையில் கடந்த ஒரு மாதத்தில் கச்சா எண்ணெய் விலை 10 சதவீதம் உயர்ந்தது. இதன் எதிரொலியாக இந்தியாவில்மக்களவைத் தேர்தல்  முடிந்ததும் பெட்ரோல், டீசல் விலை கணிசமான அளவு  உயர்த்தப்படும் என்று கூறப்படுகிறது.

Related Posts