அமெரிக்கா உதவியின்றி 2 வாரம் கூட தாக்குப் பிடிக்க முடியாது

அமெரிக்கா உதவியின்றி 2 வாரம் கூட தாக்குப் பிடிக்க முடியாது என சவுதி அரேபியா மன்னருக்கு டிரம்ப் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார்.

       சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த 4 ஆண்டுகளில் எப்போதும் இல்லாத அளவு உயர்ந்து வருகிறது. ஈரான் மீது அமெரிக்கா அண்மையில் பொருளாதார தடை விதித்துள்ளது. மேலும் ஈரானிடம் இருந்து சர்வதேச நாடுகள் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யக்கூடாது எனவும்,மீறினால் அந்த நாடுகள் மீதும் பொருளாதார தடை விதிக்கப்படும் எனவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். இதனால்தான் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கச்சா எண்ணெய் பேரலுக்கு 100 டாலருக்கு மேல் விலை ஏறும்பட்சத்தில் சவுதி அரேபியா மற்றும் எண்ணெய் உற்பத்தி செய்யும் ‘ஓபேக்‘ நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். இதன்மூலம் எண்ணெய் விலை குறையும் என டிரம்ப் வலியுறுத்தி வருகிறார். அதற்கு சவுதி அரேபியா ஒத்துக் கொள்ளவில்லை.

       இது டிரம்புக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் மிசிசிப்பி நகரில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்ட டிரம்ப், சவுதி அரேபியா மன்னரை கடுமையாக தாக்கி பேசினார். மக்களின் கரகோ‌ஷத்துக்கு இடையே பேசிய அவர், “பணக்கார நாடாக இருந்தாலும் சவுதி அரேபியாவை அமெரிக்காதான் பாதுகாக்கிறது எனவும், அந்நாட்டு மன்னர் சல்மான் மீது அதிக அன்பு வைத்திருப்பதாகவும் கூறினார். அமெரிக்கா ராணுவத்தின் தயவு இன்றி சவுதி அரேபியா மன்னர் அங்கு 2 வாரம் கூட தாக்கு பிடிக்க முடியாது என்று பகிரங்கமாக மிரட்டல் விடுத்தார்.இது உலக நாடுகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts