அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணனிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

குட்கா நிறுவனங்களிடம் லஞ்சம் பெற்ற வழக்கில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணனிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பதற்காக சுகாதாரத்துறை, உணவுப் பாதுகாப்புத்துறை, கலால்வரித்துறை, காவல்துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட செங்குன்றத்தில் கிடங்கில் குட்கா வைத்திருந்த மாதவராவ் வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த டெல்லி சிபிஐ அதிகாரிகள் சென்னையில் முகாமிட்டு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், சென்னை மாநகரக் முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்டோர் வீடுகளில் சோதனை நடத்தினர். அந்தச் சோதனையில் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதையடுத்துக் குட்கா கிடங்கு உரிமையாளர் மாதவராவ், அவரின் தொழில் கூட்டாளிகள், கலால்வரித்துறை, உணவுப் பாதுகாப்புத் துறை ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் என 6பேரைக் கைது செய்தனர். லஞ்சம் கொடுத்ததாகக் கூறப்படும் காலக்கட்டத்தில்  பணியாற்றிய விழுப்புரம் மாவட்டக் காவல்கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினர். இந்த வழக்குத் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அவரின் உதவியாளர் சரவணன் ஆகிய இருவருக்கும் சிபிஐ சம்மன் அனுப்பியிருந்தது.இதையடுத்துச் சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணன் ஆஜரானார். மாதவராவ் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சரவணனிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Related Posts