அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதற்கு வைகோ கடும் கண்டனம்

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதற்கு மதிமுக பொதுச் செயலாளரும், மாநிலங்களவை எம்.பி.யுமான வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

வேதாரண்யம் காவல் நிலையம் எதிரிலேயே அரசியல் சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் சிலையின் தலைப் பகுதி உடைத்து நொறுக்கப்பட்டு இருப்பது வேதனை அளிக்கிறது, இச்செயல் கடும் கண்டனத்துக்கு உரியது என அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
ஒரு மாத காலத்திற்கு முன்பு இரு சமூகங்களிடையே மோதல் ஏற்பட்டு, வன்முறைத் தாக்குதல்கள் நடந்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். காவல்துறையின் அலட்சியத்தின் காரணமாக, நேற்று ஓர் கும்பல் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு வேதாரண்யம் கடை வீதியில் வன்முறை வெறியாட்டத்தை நடத்தி உள்ளதாக அவர் கூறியுள்ளார். பட்டியலின மக்களின் கடைகளையும் அடித்து நொறுக்கித் தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாக வைகோ குறிப்பிட்டுள்ளார். காவல்துறை அமைதியாக வேடிக்கை பார்த்ததால், அந்த வன்முறைக் கும்பல் ஆத்திரம் தலைக்கு ஏறி, அண்ணல் அம்பேத்கர் சிலையை உடைத்து நொறுக்கி இருக்கிறது என அவர் கூறியுள்ளார். சமூக நல்லிணக்கமும், ஒற்றுமையும் இருந்தால்தான் தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழும் என்பதை இதில் தொடர்புடையவர்கள் நன்கு உணர வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். அம்பேத்கர் சிலையை உடைத்த வன்முறைக் கும்பலை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் எனக் கூறியுள்ள அவர், அரசு தரப்பில் மாற்று ஏற்பாடு செய்து, உடனடியாக மற்றொரு அம்பேத்கர் சிலையை அங்கே நிறுவி இருப்பது ஆறுதல் தருவதாக அவர் தெரிவித்துள்ளார். ஆனால், இதுபோன்ற வன்முறைகள், சிலை உடைப்புகள் தொடராமல் இருக்க தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துவதாகவும் வைகோ தமது அறிக்கையில் கூறியுள்ளார்.

Related Posts