அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டதை கண்டித்து விசிக பல்வேறு இடங்களில் போராட்டம்

வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினார்கள்.

சென்னையில் அண்ணா சாலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம் நடத்தினர். அப்போது, போலீஸாருக்கும் கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது

சென்னையில் நந்தனம் ஆடவர் கலை கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல் துறையினர் பேச்சு வார்த்தை நடத்தியதை அடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர். கோவையில் விடுதலை சிறுத்த கட்சியினர் ஊர்வலமாக சென்று ஆட்சியர் அலுவலகம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை காவல் துறையினர்  கைது செய்தனர். வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் பேருந்து நிலையம் அருகில் மறியல் போராட்டம் நடந்தது. போராட்டக்காரர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இதே போன்று ஆம்பூர், காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம், அரக்கோணம் ரயில் நிலையம், காந்தி பூங்கா உள்ளிட்ட இடங்களில் போராட்டம் நடந்தது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் கூடிய விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், சிலையை உடைத்தவர்களை கண்டித்து முழக்கங்களை எழுப்பினார்கள். மதுரை அண்ணா பேருந்துநிலையம் அருகே விடுதலை சிறுத்தை கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

புதுச்சேரியில் மறைமலை அடிகள் சாலையில் பேரணியாக சென்ற விடுதலைசிறுத்தைகள் கட்சியினர், பேருந்து நிலையம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீஸார் அவர்களை குண்டுக்கட்டாக தூக்கி சென்று கைது செய்தனர். இதனால் காவல் துறைக்கும் போராட்டக்காரர்களுக்கும் இலேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. காரைக்காலில் கண்டன முழக்கங்களை எழுப்பியபடி ஊர்வலமாக சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பேருந்து நிலையம் அருகில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் கைது செய்தனர்.

Related Posts