அம்மா முழு உடல் பரிசோதனை மையத்தை திறந்துவைத்தார் முதல்வர்

சென்னை அரசு பன்னோக்கு உயர்மருத்துவமனையில், அம்மா முழு உடல் பரிசோதனை மையத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

சென்னை : ஜூன்-08

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள அரசு பன்னோக்கு மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை மையம் அமைக்க இருப்பதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி, பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை மையம் அமைக்கப்பட்டது. இந்நிலையில், அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அமைக்கப்பட்டிருந்த நவீன முழு உடல் பரிசோதனை மையத்தை இன்று காலை, முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி தொடக்கி வைத்தார். இந்த முழு உடல் பரிசோதனை மையத்தில் சுமார் 70 வகை உடல் பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  1000 ரூபாய் கட்டணத்தில் அம்மா கோல்டு திட்டம், 2 ஆயிரம் ரூபாய் கட்டணத்தில் அம்மா டைமண்ட் திட்டம் மற்றும் 3 ஆயிரம் ரூபாய் கட்டணத்தில் அம்மா பிளாட்டினம் திட்டம் என மூன்று பிரிவுகளில் முழு உடல்பரிசோதனை திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இந்த முழு உடல் பரிசோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதனிடையே, பிரம்மா குமாரிகள் இயக்கம் சார்பில், இளைஞர் பேரணியை சென்னையில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடக்கி வைத்தார். பிரம்மா குமாரிகள் இயக்கத்தின் சார்பில் ‘எனது பாரதம் பொன்னான பாரதம்’ என்ற தலைப்பில் அகில இந்திய அளவிலான இளைஞர் பேரணி கடந்த 2017-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. 2020-ம் ஆண்டு வரை பேருந்து மூலம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பேரணியை தொடர திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பேரணியில் தூய்மை, யோகா மூலமாக அறநெறியை பேணி காக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பயணம் மேற்கொண்ட இயக்கத்தினர் இன்று முதல் சென்னையின் பல்வேறு இடங்களிலும்,நிறுவனங்களிலும், சொற்பொழிவு போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்த உள்ளனர்.   இதையடுத்து, இன்று காலை 9 மணியளவில் சென்னையில் தங்களது பேரணியைதொடங்கினர். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இளைஞர் பேரணியை கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

Related Posts