அயோத்தி வழக்கில், மத்தியஸ்தர் குழுவுக்கு ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை அவகாசம்: உச்சநீதிமன்றம் உத்தரவு

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2புள்ளி ஏழு ஏழு ஏக்கர் நிலப்பகுதியை, சன்னி வக்ஃபு வாரியம்,நிர்மோஹி அகாரா, ராம் லல்லா ஆகிய அமைப்புகள் சரிசமமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று அலாகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த 2010-இல் தீர்ப்பளித்தது.  இந்தத் தீர்ப்பை எதிர்த்து 14மேல்முறையீட்டு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இதனை விசாரித்த உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு,  இது வெறும் நிலம் சம்பந்தப்பட்ட பிரச்னை என்றால்,எளிதில் தீர்ப்பு வழங்கிவிடலாம் எனவும் ஆனால், ஹிந்து-முஸ்லிம் மதத்தினரிடையே சுமுகமான உறவை ஏற்படுத்த நீதிமன்றம் விரும்புவதாகவும் தெரிவித்தது. இரு தரப்பினரையும் சமாதானப்படுத்துவதற்காக மத்தியஸ்தர் குழுவை நியமிக்கிறோம் என்று கூறி முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிஃபுல்லா தலைமையில் கடந்த மார்ச் மாதம் மத்தியஸ்தர் குழுவை உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு நியமித்தது.  வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், மூத்த வழக்குரைஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் இந்த மத்தியஸ்தர் குழுவில் இடம்பெற்றனர். இக்குழு இந்த விவகாரத்தில் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரிடமும் பேச்சு நடத்தி, தனது இடைக்கால அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் மே 6-ஆம் தேதி தாக்கல் செய்தது. இந்நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.ஏ.போப்டே,எஸ்.அப்துல் நஸீர் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன் அயோத்தி வழக்கு இன்றுமீண்டும் விசாரணைக்கு வந்த்து. அப்போது, சமரசப் பேச்சுவார்த்தையை முழுவதுமாக முடிக்க அவகாசம் வழங்க வேண்டும் என்று மத்தியஸ்தர் குழு தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதனை ஏற்ற உச்சநீதிமன்றம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை மத்தியஸ்தர் குழுவுக்கு அவகாசம் வழங்கி உத்தரவிட்டது.

Related Posts