அயோத்தி வழக்கு : இன்று முதல் நாள்தோறும் விசாரணை

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நில விவகாரம் தொடர்பான வழக்கை, உச்சநீதிமன்றத்தின் அரசியல்சாசன அமர்வு இன்று முதல் நாள்தோறும் விசாரிக்கிறது.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய பாபர் மசூதி மற்றும் ராம ஜென்மபூமி என்று கூறப்படுகிற இடம் உள்ளது.

2 புள்ளி 77 ஏக்கரான இந்த நிலம் யாருக்கு சொந்தம்? என்பது தொடர்பான மேல்முறையீட்டு மனுக்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.

இந்த விவகாரத்தில், சம்பந்தப்பட்ட தரப்பினரிடையே சமரசம் ஏற்படுத்தும் முயற்சியாக, மத்தியஸ்தர் குழுவை கடந்த மார்ச் மாதம் உச்சநீதிமன்றம் அமைத்தது.

அனைத்து தரப்பினருடன் சமரச முயற்சியில் ஈடுபட்ட அக்குழு, தமது அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் கடந்த வாரம் தாக்கல் செய்தது.

அதில், சமரச முயற்சி தோல்வியில் முடிந்ததாகவும், இறுதி முடிவு எதுவும் எட்டப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, கடந்த வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற விசாரணையின்போது, மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையை வருகின்ற 6-ம் தேதி முதல் தொடங்கவுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர். அதன்படி, இன்று முதல் நாள்தோறும் அயோத்தி வழக்கு விசாரணை நடைபெறவுள்ளது.

Related Posts