அரசிடம் கேள்வி கேட்க ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை இருக்கிறது

வரியாக கொடுத்த பணம் வீணடிக்கப்படும்போது, அதுகுறித்து அரசிடம் கேள்வி கேட்க ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை இருப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

          புதிய தலைமை செயலக கட்டிடம் கட்டியதில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுப் பெற்ற நீதிபதி ஆர்.ரெகுபதி தலைமையில் கடந்த 2011-ம் ஆண்டு விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த விசாரணை ஆணையம், மறைந்த முன்னாள் முதல்அமைச்சர் கருணாநிதி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் துரைமுருகன் ஆகியோரை விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பியது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கருணாநிதி உள்ளிட்ட 3 பேரும் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், விசாரணை ஆணையம் குறித்து கடும் கண்டனம் தெரிவித்ததை தொடர்ந்து, நீதிபதி ஆர்.ரெகுபதி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

          இந்நிலையில், இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணை ஆணையத்துக்கு புதிய நீதிபதி யாரையும் நியமிக்கவில்லை எனவும், லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, விசாரணை ஆணையத்துக்கு எதிராக கருணாநிதி, மு.க.ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோர் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற அனுமதி கேட்டு புதிய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை இன்று விசாரித்த  நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் மனுக்களை வாபஸ் பெற அனுமதி வழங்கி உத்தரவிட்டார். மேலும், அரசியல் காரணங்களுக்காக அரசு எடுக்கும் கொள்கை முடிவுகளினால் மக்களின் வரிப்பணம் தான் வீணடிக்கப்படுவதாக நீதிபதி தெரிவித்தார். புதிய தலைமைச் செயலகத்துக்காக கட்டப்பட்ட கட்டிடம் மருத்துவமனையாக மாற்றப்பட்டதில், வரிப்பணம் வீணாகியுள்ளது எனவும், ஒரு அரசு கட்டிய சட்டப் பேரவையை மாற்றி அமைப்பதற்கும்,அழகுபடுத்துவதற்கும் பணம் வீணடிக்கப்படுவதாகவும் நீதிபதி குறிப்பிட்டார்.  இதுகுறித்து விசாரணை நடத்த ஒரு ஆணையம் அமைத்து, அதற்கு 5 கோடி ரூபாய் வரை செலவும் செய்யப்பட்டிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். வரியாக கொடுத்த பணத்தை அரசு வீணடிக்கும்போது, அதுகுறித்து கேள்விக் கேட்க ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உள்ளது’ என்று நீதிபதி கருத்து தெரிவித்தார்.

Related Posts