அரசினர் ஆதிதிராவிட நல மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் பணியிடங்களை உடனே நிரப்புக :வைகோ

Want create site? Find Free WordPress Themes and plugins.

இது தொடர்பாக இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்ட்த்திற்குட்பட்ட  மாமல்லபுரத்தை அடுத்த மணமை ஊராட்சியில் கடந்த 1935 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட அரசினர் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் 276 இருபால் மாணவர்கள் பயின்று வருவதாக வைகோ தெரிவித்துள்ளார்.

ஆதிதிராவிடப் பள்ளியாக இருந்தபோதிலும் அனைத்து சமூகத்து மாணவர்களும் இணைந்து பயிலும் பொதுப்பள்ளியாகவே  விளங்கி வருவதாகவும் அந்தப்பள்ளிக்குப் போதுமான ஆசிரியர்கள்  இல்லாமல் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும்  அருகாமையில் உள்ள கடம்பாடி ஊராட்சி, குன்னத்தூர் ஊராட்சியைச் சார்ந்த மாணவர்களும் இந்தப் பள்ளியில் பயின்று வருவதை வைகோ தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசினர் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் முதல் வகுப்பில் இருந்து ஐந்தாம் வகுப்பு வரை 91 இருபால் மாணவர்கள் பயின்று வருவதாகவும் அவர்களுக்கு 5 ஆசிரியர்கள் பணியிடம் ஒதுக்கப்ப்பட்ட நிலையில் தற்போது ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே பணியில் இருப்பதாக வைகோ கூறியுள்ளார்.

இதேபோல்  6-ஆம் வகுப்பில் இருந்து 10-ஆம் வகுப்பு வரை 137 இருபால் மாணவர்கள் பயின்று வருவதாகவும் அவர்களுக்கு 9 ஆசிரியர்கள் பணியிடம் ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போது ஒரேஒரு ஆசிரியர் மட்டுமே பணியில் இருப்பதை வைகோ தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் 11-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு வரை 48 இருபால் மாணவர்கள் பயின்று வருவதாகவும் அவர்களுக்கு  3 ஆசிரியர்கள் மட்டுமே தற்போது  உள்ளதாகவும் கூடுதலாக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும் என்று பலமுறை மனு கொடுத்தும் போதுமான ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்படவில்லை என வைகோ வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

வகுப்புகளில் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் மற்றும் கணினி, உடற்கல்வி, ஆய்வுக் கூடங்கள், நூலகம், விளையாட்டுத் திடல், கழிவறைகள் இவை அனைத்தும் ஒவ்வொரு பள்ளியிலும் இருப்பதை தமிழக அரசு உறுதிப்படுத்திட வேண்டும் எனவும் தேர்வுகள் நெருங்கி வருகின்ற வேளையில் போதுமான ஆசிரியர்களை உடனடியாக பணி அமர்த்திட வேண்டும் எனவும் வைகோ கேட்டுக்கொண்டுள்ளார்.

கல்பாக்கம் அணு உலை சுற்றுச்சுவர் அருகாமையில் அமைந்துள்ள இந்தப் பள்ளிக்கு எந்தப் பயனும் இல்லை என்பது தெளிவாகியுள்ளதாகவும், அணு உலை அமைவதற்கு நிலம் கொடுத்த சுற்றுப்புற கிராம மக்களுக்கு மக்கள் நலத் திட்டங்களைச் செய்து வருவதாக மத்திய அரசு சொல்வது இதன் மூலமாக பொய்த்துப்போய் உள்ளதாகவும் வைகோ கூறியுள்ளார்.

எனவே காலம் தாழ்த்திடாமல் போர்க்கால அடிப்படையில் போதுமான ஆசிரியர்கள் பணியிடங்களை நியமித்திட ம.தி.மு.க சார்பில் தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்வதாக வைகோ குறிப்பிட்டுள்ளார்.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Related Posts