அரசின் அன்றாட நடவடிக்கைகளில் ஆளுநர் கிரண்பேடி தலையிட கூடாது

புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தலையிட கூடாது என்ற உத்தரவு தொடரும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

புதுச்சேரி யூனியன் பிரதேச அரசின் அன்றாட நடவடிக்கைகளில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தலையிடுவதால் அதிகாரிகள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. எனவே, அரசின் நடவடிக்கைகளில் தலையிட துணை நிலை ஆளுநருக்கு சிறப்பு அதிகாரம் உள்ளதாக மத்திய அரசு 2017ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும், என காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமிநாராயணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிட கிரண்பேடிக்கு அதிகாரம் கிடையாது எனக்கூறி, ஆளுநருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அதிகார உத்தரவையும் ரத்து செய்து தீர்ப்பு வழங்கியது. தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து கிரண்பேடி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதேபோல் மத்திய அரசின் உள்துறையும் தனியாக மனுவை தாக்கல் செய்தது. இந்நிலையில், இந்த வழக்கானது இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் கிரண்பேடி தலையிட கூடாது என்ற உத்தரவு தொடரும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், தனிநீதிபதியின் உத்தரவுக்கு தடைவிதிக்க மத்திய அரசு விடுத்த கோரிக்கையையும் உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. மத்திய அரசின் மனு குறித்து, புதுவை எம்.எல்.ஏ. லட்சுமிநாராயணன் மற்றும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஆகியோர் செப்டம்பர் 4ம் தேதிக்குள் பதில் தர உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கை ஒத்திவைத்துள்ளது.

Related Posts