அரசியல் சாசனப்படி ஆதார் செல்லும்

அரசியல் சாசனப்படி ஆதார் செல்லும் என்று உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

            நாடு முழுவதும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் எண் எனப்படும் 12 இலக்க தனித்துவ எண்ணை வழங்கும் திட்டத்தை கடந்த 2009-ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கொண்டு வந்தது. மத்திய அரசின் பல்வேறு சேவைகளை பெறுவதற்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்கும் வகையில், ஆதார் சட்டத்தை கடந்த 2016-ம் ஆண்டில் பாஜக கூட்டணி அரசு நிறைவேற்றியது. ஆதாரை கட்டாயமாக்கும் மத்திய அரசின் சட்டம், ஆதார் சட்டம் ஆகியவற்றை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 31 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி, ஏ.எம். கான்வில்கர், டி.ஒய். சந்திராசூட், அசோக் பூஷண் ஆகிய 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வு முன்பு நடைபெற்று வந்தது.

            இந்த விசாரணை கடந்த மே மாதம் 10ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்தது. 3 நீதிபதிகள் சார்பில், சுமார் 40 பக்க தீர்ப்பை நீதிபதி சிக்ரி வாசித்தார். அதில், ஆதாருக்காக பெறப்படும் தகவல்கள் மிகக்குறைவு ஆனால் நன்மைகள் அதிகம் எனவும், அரசு சேவைகளை பெற ஆதார் கட்டாயம் எனவும் கூறியுள்ளனர்.

             இதில் தனிமனித ரகசியத்தை பாதிக்கும் என்பதுதான் ஆதாரை எதிர்ப்போர் முன்வைக்கும் வாதமாக உள்ளது எனவும், தனிநபர் கண்ணியம் காக்கப்பட ஆதார் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் மேற்கொள்ள வேண்டும் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் ஒருவருக்கு தரப்படும் ஆதார் மற்றவர்களுக்கு தரமுடியாத அளவிற்கு பாதுகாப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளதாக நீதிபதி ஏகே சிக்ரி தெரிவித்துள்ளார்.  மேலும் மகத்துவமாக இருப்பதைவிட தனித்துவமாக இருப்பது உகந்தது எனவும்,. தனித்த அடையாளம் ஏழை எளியவர்களை அதிகாரம் பெற்றவர்காளாக மாற்றும் என்றும் நீதிபதி சிக்ரி கூறியுள்ளார்.  மேலும், பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, மற்றும் நீட், சிபிஎஸ்இ உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளுக்கு ஆதாரை கட்டாயமாக்கக் கூடாது என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கி கணக்குடன் இணைக்கவும் மற்றும் புதிய தொலைப்பேசி எண்ணை பெறவும் ஆதார் அவசியமில்லை என்று தீர்ப்பில் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Related Posts