அரசுப் பள்ளிகளுக்கு சேவை செய்திட அழைப்பு – கே.ஏ.செங்கோட்டையன்

அரசுப் பள்ளிகளுக்கு சேவை செய்திட முன்னாள் மாணவர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்திலும், உலகத்தின் பல்வேறு இடங்களிலும் உள்ள முன்னாள் மாணவர்களும், அந்தந்தப் பகுதிகளில் உள்ள தொழிலதிபர்களும் அரசு பள்ளிகளை தத்தெடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

எவ்வளவு தான், அரசு நிதிகளை ஒதுக்கினாலும், ‘என் பள்ளி இது’ என்ற எண்ணத்தை தன்இதயத்தில் ஏந்திய  நல்லோரின் துணை, அனைத்துப் பள்ளிகளையும் மேலும் மெருகூட்டிட வழிவகை செய்திடும் என அவர் கூறியுள்ளார். பள்ளிகளின் உட்கட்டமைப்பு, சுற்றுச்சுவர்,வர்ணம் பூசுதல், இணைய வசதிகள், சுகாதாரமான கழிவறைகள், ஆய்வகங்கள், நூலகங்கள் போன்ற அடிப்படை வசதிகளை தாங்களாகவே மனமுவந்து செய்ய விரும்பினால், எவ்வித தாமதமும் இன்றி உடனடியாக அனுமதி வழங்க வேண்டுமென்று நிர்வாக அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளர்.

கல்வி ஒன்றால் தான் அடுத்த தலைமுறையினருக்கு சிறந்த சேவையை செய்திட முடியும் எனவும், அனைவரும் ஒன்று சேர்ந்து வளமிகு அரசுப் பள்ளிகளுக்கு மேலும் பலம் சேர்க்க கரம் கோர்த்து செயல்படுவோம் என்றும் அந்த அறிக்கையில் அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Posts