அரசு, தனியார் பள்ளிகள் அங்கீகாரம் பெறுவதற்கான கால அவகாசம் நீடிப்பு: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு 

கடந்த 2009-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் அடிப்படியில் செயல்படக்கூடிய பள்ளிகள் முறையான அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும்.  ஆனால் தமிழகத்தை பொறுத்தவரையில் அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளி என மூன்று வகையாக செயல்பட்டு வருகின்றன. இதில் தனியார் மற்றும் அரசு பள்ளியை சேர்ந்த சுமார் 800-க்கும் மேற்பட்ட பள்ளிகள் தமிழகத்தில் முறையாக அங்கீகாரம் பெறாமல் இயங்கிவருவதாக சில நாட்களுக்கு முன்பாக பள்ளிக்கல்வித்துறை பட்டியல் ஒன்றை வெளியிட்டு இருந்தது. இந்த பள்ளிகள் வரும் 31-ம் தேதிக்குள் அங்கீகாரத்தை முறையாக பெற வேண்டும் எனவும்,  இல்லையெனில் அப்பள்ளிகளை மூட வேண்டும் எனவும் கடுமையாக எச்சரிக்கப்பட்டது. இந்நிலையில் தனியார் பள்ளி கூட்டமைப்பு சார்பில் மாணவர்களின் நலன் கருதி காலஅவகாசம் வழங்க வேண்டும் என்று, கோரிக்கை வைக்கப்பட்டது.  குறிப்பிட்ட பள்ளியில் படிக்கக்கூடிய மாணவர்கள் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத வேண்டுமானால் அந்த பள்ளியானது முறையாக அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். ஒரு பள்ளி முறையான அங்கீகாரம் பெறவில்லை என்றால் அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத தகுதியில்லாத மாணவர்களாக அறிவிக்கப்படுவார்கள். எனவே தற்போது 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு செல்ல இருக்கும் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட கூடாது என்பதன் அடிப்படையில் பள்ளியில் அங்கீகாரம் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.   இந்நிலையில் முறையான அங்கீகாரத்தை அடுத்த ஆண்டு மே 31-ம் தேதிக்குள் பெற வேண்டும் என்று கால அவகாசத்தை நீட்டிப்பு செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Related Posts