அரசு நிலத்தில் இருந்து சாஸ்திரா பல்கலைக்கழகம் வெளியேற வேண்டும்

அரசு நிலத்தில் இருந்து சாஸ்திரா பல்கலைக்கழகம் வெளியேற வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

         இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தஞ்சாவூரில் திறந்த வெளி சிறைச்சாலை அமைக்க ஒதுக்கீடு செய்யப்பட்ட 58 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்துள்ள சாஸ்திரா பல்கலைக்கழகம் அக்டோபர் 3-ந்தேதிக்குள் அங்கிருந்து வெளியேற வேண்டும்” என்று தாசில்தார் நோட்டீஸ் அனுப்பியும், நில ஆக்கிரமிப்பையும் 28 கட்டிடங்களையும் அகற்றிக் கொள்ள,  இன்று வரை நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என கூறியுள்ளார். சாஸ்திரா பல்கலைக்கழகத்தின், இந்த சட்டமீறல் அநியாயத்திற்குத் துணைபோகும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதாக அவர் கூறியுள்ளார்.

          உயர்நீதி மன்றத்தின் மூன்றாவது நீதிபதி அளித்த தீர்ப்பையும் மதிக்காமல், பல்வேறு நிலைகளில் முறையீடுகளை செய்தும் “அரசு நிலத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் பேராசை மனப்பான்மையுடன்” ஒரு பல்கலைக்கழகம் நடந்து கொள்வதும், அதற்கு முதல்-அமைச்சர், வருவாய்த் துறை அமைச்சர், தலைமைச் செயலாளர் ஆகியோர் துணை போவதும் உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பையே செயலிழக்கச் செய்வதைப் போல் அமைந்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். அக்டோபர் 3-ந்தேதிக்குள் ஆக்கிரமித்த நிலங்கள் மற்றும் அங்கு கட்டியுள்ள கட்டிடங்களில் இருந்து வெளியேற வேண்டும் என்ற தஞ்சாவூர் தாசில்தாரின் நோட்டீஸ் என்ன ஆகப்போகிறது என்ற கேள்வி பெரிதாக எழத் தொடங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

         சாலையோரங்களில் குடியிருக்கும் ஏழைகளை காலி பண்ணவும், சேலம் எட்டு வழி சாலைத் திட்டத்திற்கு விவசாயிகளின் நிலங்களைப் பறிக்கவும் காவல்துறையை ஏவிவிட்ட அ.தி.மு.க. அரசு, சாஸ்திரா பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ள,நிலங்களை பறிமுதல் செய்ய இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

         ஆகவே, இனியும் காலதாமதம் செய்யாமல் தஞ்சாவூர் சாஸ்திரா பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ள 58 ஏக்கர் நிலத்தை உடனடியாகக் கைப்பற்றி, திறந்த வெளி சிறைச்சாலை அமைக்கும் பணிகளை தமிழக அரசு தொடங்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Related Posts