அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் வாய்ப்பு

அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், தென் மேற்கு வங்கக் கடல் பகுதியில் இலங்கையை ஒட்டிய வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதாகவும், இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மிதமான மழை பெய்துள்ளதாகவும் கூறினார். ஓரிரு இடத்தில் கன மழை பெய்துள்ளது எனவும், அதிகபட்சமாக மணல்மேல்குடி, தக்கலை பகுதியில் தலா 7 சென்டி மீட்டரும், குடவாசல், குளித்தலையில் தலா 6 சென்டி மீட்டரும் மழை பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அடுத்த 3 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்யக் கூடும் எனவும், ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக் கூடும் எனவும் அவர் தெரிவித்தார். மேலும் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் அக்டோபர் 5ம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாகவும், இந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி 6 மற்றும் 7ம் தேதிகளில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக வலுவடைய வாய்ப்பு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதன் காரணமாக மீனவர்கள் குமரி கடல் மற்றும் லட்சத் தீவுப் பகுதிகள், தென் கிழக்கு மற்றும் மத்திய அரபிக் கடல் பகுதிக்கு அக்டோபர் 6 முதல் 8ம் தேதி வரை செல்ல வேண்டாம் எனவும், ஆழ்க்கடலில் உள்ள மீனவர்கள் அக்டோபர் 5ம் தேதிக்குள் கரைக்குத் திரும்புமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார். சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்தார்.

Related Posts