அருண் ஜெட்லியின் விளக்கத்திற்கு முன்னாள்  மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பதிலடி

ரபேல் போர் விமான ஒப்பந்த ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக அருண் ஜெட்லியின் விளக்கத்திற்கு முன்னாள்  மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பதிலடி கொடுத்துள்ளார்.

         ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தை இணைக்க மத்திய அரசு வற்புறுத்தியதாக பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டே அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்து இருந்தார். இந்த பேட்டி இந்திய அரசியலில் புயலை கிளப்பியது. ஆனால், விமானத்தை தயாரிக்கும் டசால்ட் நிறுவனமோ, தங்களுக்கு தேவையான நிறுவனத்தை தாங்களே தேர்வு செய்து கொள்ளலாம் என விளக்கம் அளித்திருந்தது. இந்த விவகாரத்தில் மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வரும் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ரபேல் ஒப்பந்தத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பதாகவும், இது பற்றி நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி வருகிறார். ஆனால், எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டுவதால் ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியாது என்றும் ரபேல் விமானங்கள் இந்தியா வந்தடையும் என்றும் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி திட்டவட்டமாக கூறியுள்ளார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம், ‘உண்மைக்கு இரண்டு முகங்கள் இருக்க முடியாது என்று நிதி அமைச்சர் ஜெட்லி  கூறுவது  ஏற்கதக்கது எனவும், ஆனால் எந்த முகம் உண்மை முகம் என்று எப்படி கண்டு பிடிப்பது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். ஒன்று, விசாரணைக்கு உத்தரவிடுவது அல்லது நாணயத்தைச் சுண்டி பூவா, தலையா பார்ப்பது  என   இரண்டு வழிகள் மட்டுமே இருப்பதாக கூறிய ப.சிதம்பரம்,  நிதி அமைச்சர்  அருண்ஜெட்லி இரண்டாவது வழியை விரும்புகிறாரா என கேள்வி எழுப்பியுள்ளார். ரபேல் விமான உடன்பாட்டில் தவறு நடந்திருக்கிறதா என்பதைக் கண்டு பிடிக்க விசாரணையைத் தவிர வேறு வழியில்லை’ என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

Related Posts