அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் பேசும் போது மைக்கை அணைத்த ஆளுநர்

புதுவையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் பேசும் போது மைக்கை அணைக்குமாறு துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டதால் இருவருக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

புதுவை மாநிலம் திறந்தவெளி கழிப்பறை இல்லாத பகுதியாக அறிவிக்கும் நிகழ்ச்சி இன்று கம்பன் கலையரங்கில் நடைபெற்றது. இதில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, அமைச்சர்கள் நமச்சிவாயம், கமலக்கண்ணன், ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் அன்பழகனும் அழைக்கப்பட்டிருந்தார். விழா தொடங்கியதும் பேசிய அன்பழகன்,  விழா அழைப்பிதழில் தனது பெயர் முறைப்படி அச்சிடப்படவில்லை என்று குற்றம்சாட்டினார். மேலும் அவர் தொகுதியில் உள்ள பல்வேறு குறைகளை சுட்டிக்காட்டி பேசினார். அவர் பேசத் தொடங்கி 15 நிமிடம் கடந்துவிட்டதால், ஆளுநர் கிரண்பேடி அங்கிருந்த ஒரு அதிகாரியை அழைத்து  பேச்சை நிறுத்த சொல்லுங்கள் என்று கூறினார். ஒரு முறைக்கு இரு முறை அதிகாரிகள் கூறியும் அன்பழகன் பேச்சை தொடர்ந்ததால் கோபமடைந்த கிரண்பேடி மைக்கை அணைக்கும்படி உத்தரவிட்டார். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் மேடையைவிட்டு இறங்கி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அன்பழகன், ஒரு ஆளுநருக்கு சட்டமன்ற உறுப்பினரிடம்  எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றுகூட தெரியவில்லை என்றார். அவர் நடந்து கொண்டவிதம் தன்னை மட்டும் அல்ல, ஒட்டுமொத்த சட்டமன்ற உறுப்பினர்களையும் அவமதிக்கும் வகையில் இருந்ததாக அவர் தெரிவித்தார்.  தனது தொகுதியில் நடைபெறும் விழாவில், மக்களுக்காக இங்கு பேசிதான் ஆக வேண்டும் எனவும்,  அதைத்தான் இங்கு பேசியதாகவும் அவர் கூறினார். ஆனால் தன்னை பேச விடாமல் தடுத்து  மைக்கை  துண்டிப்பது அவருடைய பதவிக்கு அழகல்ல எனவும், அவர் மீது உரிமை மீறல் பிரச்சனை புகார் கொடுக்கப் போவதாகவும் அவர் கூறினார்.

இந்த நிகழ்வு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, அரசு விழாவில் நேர மேலாண்மையை கடைப்பிடிக்குமாறு தாம் வலியுறுத்தியதாகவும், அதிமுக  சட்டமன்ற உறுப்பினர் அன்பழகனை அவமதிக்கும் நோக்கம் தமக்கு இல்லை எனவும் விளக்கம் அளித்தார்.

Related Posts