ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடைப் பூங்கா அமைக்கப்படும் : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடைப் பூங்கா சேலம் மாவட்டத்தில் அமைக்கப்படும் என, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் சேலத்தில் இரண்டாவது நாளாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, சிறப்பு குறை தீர்க்கும் கூட்டத்தில் பட்டா வழங்கப்படுவதுடன், பட்டா மாறுதலும் செய்து கொடுக்கப்படும் என்றார். அதுமட்டுமல்லாமல், நீண்ட காலமாக வசித்து வந்த இடத்திற்கு பலரும் வீட்டு மனைப் பட்டா இதுவரை வாங்காமல் இருந்திருப்பீர்கள் என்றும், தகுதி வாய்ந்தவர்கள் அனைவருக்கும், வீட்டு மனைப் பட்டா வழங்கப்படும் எனவும் அவர் கூறினார். வீட்டு மனைப் பட்டா இருந்து வீடு இல்லாத ஏழை மக்களுக்கு வீடு கட்டித் தர அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என குறிப்பிட்ட அவர், பேரூராட்சிகளில் அடுக்கு மாடி வீடுகள் கட்டித் தரப்படும் எனவும் கூறினார். நீரை சேகரிப்பது நம் ஒவ்வொருவரின் கடமை என எண்ணி செயல்பட வேண்டும் என அறிவுறுத்திய முதலமைச்சர், ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடைப் பூங்கா சேலம் மாவட்டம் தலைவாசலில் அமைய இருப்பதாக கூறினார். ஆயிரத்து 200 ஏக்கரில் அதனை நடைமுறைப்படுத்த திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது என்று அவர் தெரிவித்தார். இந்த கால்நடைப் பூங்கா வரும்போது, கால்நடை ஆராய்ச்சி மையமும் உருவாக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார். அத்துடன் கால்நடை மருத்துவக் கல்லூரி ஒன்றும் அமைக்கப்பட உள்ளதாக கூறிய முதலமைச்சர், கால்நடைப் பூங்கா அமைந்தால் இந்தப் பகுதி மிகப்பெரிய வளர்ச்சியை அடையும் எனவும் நம்பிக்கை வெளியிட்டார்.

Related Posts