ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 10 நாட்களுக்குள் கலந்தாய்வு : அமைச்சர் செங்கோட்டையன்

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 10 நாட்களுக்குள் கலந்தாய்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளிலும், தனியார் பள்ளிகளிலும், ஆசிரியர்கள் பணியாற்ற, ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் தேர்ச்சி பெற்ற வேண்டும் என விதிமுறை, 2011ஆம் ஆண்டு முதல் அமலில் உள்ளது. இந்த வகையில், ஒன்று முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கற்பிக்கும், இடைநிலை ஆசிரியர் பணிக்கான, ஆசிரியர் தகுதித் தேர்வு, கடந்த ஜூன் மாதம் 8ஆம் தேதி நடைபெற்றது. இதனை, 1,62,314 பேர் எழுதியிருந்தனர்.

இந்நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வு, முதல் தாள் தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு நடத்தப்பட்டு இரண்டே மாதத்தில் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

தேர்வுக்கான விடைக்குறிப்பையும் ஆசிரியர் தேர்வு வாரியம் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. விரைவில், ஆசிரியர் தகுதித்தேர்வு இரண்டாம் தாள் முடிவுகளும் வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஆசிரியர் தகுதித்தேர்வு முதல் தாள் தேர்வு முடிவில் ஒரு சதவீத பேர் கூட தேர்ச்சி பெறவில்லை என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 10 நாட்களுக்குள் கலந்தாய்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

Related Posts