ஆதார் மூலம் 90ஆயிரம் கோடி ரூபாயை அரசு சேமித்துள்ளது

ஆதார் மூலம் 90ஆயிரம் கோடி ரூபாயை அரசு சேமித்துள்ளதாக நிதி அமைச்சர் அருண்ஜெட்லி கூறியுள்ளார்.

டெல்லியில்  செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆதார் வழக்கில் உச்சநீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க உத்தரவை பிறப்பித்துள்ளது எனவும், இதனை வரவேற்பதாகவும் கூறினார். ஆதார் பற்றி விமர்சித்தவர்கள், தொழில்நுட்பத்தை வெல்ல முடியாது என்பதை இனியாவது புரிந்து கொள்ள வேண்டும் என்ற அவர், ஆதார் திட்டத்தை அறிமுகம் செய்தது காங்கிரஸ்தான் என்றாலும் அதில் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி அவர்களுக்கு தெரியாது என்று தெரிவித்தார். ஆதார் மூலம்  90 ஆயிரம் கோடி ரூபாய் அரசு சேமித்துள்ளதாக அருண்ஜெட்லி கூறினார்.

மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், நல்லாட்சிக்கான அடையாளம் தான் ஆதார் எனவும், ஆதார் தீர்ப்பை வரவேற்பதாகவும் தெரிவித்தார்.

தீர்ப்பு குறித்து சுட்டுரைப் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “காங்கிரஸைப் பொறுத்தவரை ஆதார் கார்டு என்பது ஒவ்வொரு இந்தியரையும் வலுப்படுத்தும் சாதனம் எனவும், பாஜகவை பொறுத்தவரை அது மக்களை கண்காணிக்கவும், ஒடுக்கவும் பயன்படுத்த முனைந்ததாகவும் கூறியுள்ளார். காங்கிரஸின் நோக்கமே சரியானது என்று உச்சநீதிமன்ற தீர்ப்பு தெளிவுபடுத்தி விட்டது‘ எனவும், காங்கிரஸின் நோக்கத்தை காப்பாற்றிய உச்சநீதிமன்றத்திற்கு நன்றி எனவும் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

Related Posts