ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையை உடனே வழங்க வைகோ வலியுறுத்தல்

 

 

சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் பயிலும் ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகையை உடனடியாக வழங்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது ;-

சுயநிதி பொறியியல் கல்லூரிகள், பலிடெக்னிக் கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் மதம் மாறிய கிறித்துவ ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை 2017 – 2018 ஆம் கல்வி ஆண்டு முடியும் தருவாயில் உள்ள நிலையில், ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் கல்லூரிகளுக்கு இன்னும் வழங்கப்படாமல் உள்ளது. இதனால் சுயநிதி கல்லூரிகளில் பயிலும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள ஆதிதிராவிடர் மாணவர்களிடம் கல்விக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும், இல்லையேல் தேர்வுகள் எழுத அனுமதிக்க முடியாது என கல்லூரி நிர்வாகத்தினர் வற்புறுத்துகின்றனர். இதனால் ஆதிதிராவிடர் மாணவர்கள் தங்களின் படிப்பைப் பாதியிலேயே விட்டுச் செல்லும் அபாயம் உள்ளது.

மேலும் இறுதியாண்டு பயிலும் ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் தர மறுக்கின்றனர். இதனால் மாணவர்கள் வேலைவாய்ப்புகளை தவறவிடும் சூழ்நிலை உள்ளது. அதனால் இறுதியாண்டு பயிலும் ஆதிதிராவிடர் மாணவர்கள் கல்விக் கட்டணத்தைச் செலுத்தி சான்றிதழ்களைப் பெறும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

சுயநிதி கல்லூரிகளிடம் கேட்டால், 2017-2018 ஆம் கல்வி ஆண்டு முடியும் தருவாயில் தமிழக அரசிடமிருந்து எந்தவிதமான கல்வி உதவித் தொகையும் வழங்க ஆதிதிராவிடர் நலத்துறையின் இணையதளத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கான கல்வித் தொகை தரவு தளத்தில் (online) பதிவுகள் மேற்கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது என்கின்றனர். இதன் காரணமாக 2018-2019 ஆம் கல்வி ஆண்டில் சுயநிதி கல்லூரிகளில் சேரும் ஆதிதிராவிடர் மாணவர்கள் கல்விக் கட்டணத்தைச் செலுத்தினால் மட்டுமே சேர்க்கை நடைபெறும் என்ற சூழல் உள்ளது.

மத்திய, மாநில அரசுகளின் மெத்தனப் போக்கால் சுயநிதி கல்லூரிகளில் பயிலும் ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு கல்வி என்பது கேள்விக் குறியாக உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு அரசு நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுத்து, ஆதிதிராவிடர் மாணவர்களின் வாழ்வில் ஒளி ஏற்றிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார். 

Related Posts