ஆந்திராவில் வாக்குப்பதிவு இயந்திரம் கோளாறு,மறுதேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்திற்கு சந்திரபாபு நாயுடு கடிதம்

மக்களவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு 20 மாநிலங்களில் உள்ள 91 தொகுதிகளில்இன்று நடைபெற்றது.  ஆந்திராவில் உள்ள 25 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 175 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.  வாக்காளர்கள் காலை முதலே ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்குச் சென்று வாக்குகளை பதிவு செய்தனர். ஒருசில வாக்குச்சாவடிகளில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதானதால் சிறிது நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. பின்னர்  வாக்குப்பதிவு இயந்திரம் பொருத்தப்பட்டு வாக்குப்பதிவு தொடங்கியது. சில இடங்களில் 9 மணி வரை மாற்று இயந்திரம் இல்லாததால் வாக்குப்பதிவு தொடங்கவில்லை. இது தொடர்பாக, முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அவசர கடிதம் அனுப்பி உள்ளார். அதில், ஆந்திராவில் நூற்றுக்கணக்கான வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதடைந்தடைந்ததால் வாக்குப்பதிவு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது எனவும், இதனால் திரும்பி சென்றுவிட்ட வாக்காளர்கள் மீண்டும் வாக்களிக்க வரமாட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளார். எனவே, வாக்குப்பதிவு இயந்திர கோளாறு காரணமாக, காலை 9.30 மணிவரை வாக்குப்பதிவு தொடங்காத இடங்களில் மறுதேர்தல் நடத்த வேண்டும் என அந்த கடிதத்தில் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

Related Posts