ஆந்திர அரசின் தடுப்பணை பணியை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் – மு.க.ஸ்டாலின்

பாலாற்றின் குறுக்கே, 40 அடியாக உயர்த்திக்கட்டும் ஆந்திர அரசின் தடுப்பணை பணியை தமிழக அரசு  தடுத்து நிறுத்த வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

பாலாற்றின் குறுக்கே   கங்குந்தி என்ற இடத்தில் உள்ள தடுப்பணை முதலில் ஏழரை அடி உயரம் கொண்டதாக கட்டப்பட்டது. பின்னர் தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நேரத்தில்  அதன் உயரம் 22 அடியாக உயர்த்தப்பட்டது.

தற்போது வேலூர் நாடாளுமன்ற தேர்தல் பரப்புரை நடைபெற்று வரும் நிலையில், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, அணையின் உயரத்தை  40அடியாக அதிகரிக்கும் பணிகள்  கடந்த 15 நாட்களாக சத்தமின்றி நடைபெற்று வருகிறது. இதற்காக ஆந்திர அரசு 43 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டுவதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், அதை கண்டுகொள்ளாத ஆந்திர அரசு, அணையின் உயரத்தை அதிகரிப்பதிலேயே குறியாக உள்ளது.

இது தொடாபாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்  நதி நீர் உரிமைகள், அ.தி.மு.க ஆட்சியில் ஒவ்வொன்றாகப் பறிபோய்கொண்டிருப்பதன் அடுத்த கட்டமாக, பாலாற்றின் குறுக்கே 22 தடுப்பணைகளின் உயரத்தை அதிகரிக்கும் பணியில் ஆந்திரா ஈடுபடுவதை, அரசு தொடர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.  உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தும் இன்று வரை தடையுத்தரவு பெற முடியாமல், தமிழக அரசு தோல்வியடைந்து நிற்பதாகவும் அவர்  தெரிவித்துள்ளார்.  வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களின் நீர் ஆதாரங்களை பாதிப்பிற்கு உள்ளாக்கும், பணியை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என்று  அந்த அறிக்கையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

Related Posts