ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சிலைகள் மாயம்

 

தஞ்சை பெரிய கோயிலில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சிலைகள் மாயமாகிவிட்டதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்

சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் வசித்து வரும் ரன்வீர்ஷா வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த புராதன கற்சிலைகள், தூண்கள் உள்ளிட்ட 91 வகையான கலைப்பொருட்களை ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.  அந்த சிலைகள் அனைத்தும் கிண்டியில் உள்ள சிலை தடுப்பு பிரிவு அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலைகள் அனைத்தும் கும்பகோணத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நாளை ஒப்படைக்கப்படும் என்று தெரிகிறது. இந்நிலையில் ரன்வீர் ஷாவுக்கு சொந்தமாக தஞ்சை மாவட்டம் திருவையாறில் காவிரி பாலம் வலது கரையில் அரண்மனை இருப்பது தெரிய வந்தது. மராட்டிய மன்னர் சரபோஜிக்கு சொந்தமான இந்த அரண்மனையை ரன்வீர்ஷா, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கியதாகவும் தற்போது அதன் மதிப்பு பல கோடி ரூபாய் எனவும் கூறப்படுகிறது. பூட்டப்பட்ட நிலையில் உள்ள  ரன்வீர்ஷா அரண்மனை காவலாளி ஒருவரின்  பாதுகாப்பில் உள்ளது. தற்போது சிலை கடத்தலில் சிக்கியுள்ள ரன்வீர்ஷா, இந்த அரண்மனையில் ஏதேனும் சிலைகள், மற்றும் பழங்கால மன்னர்கள் காலத்தை சேர்ந்த மூலிகையிலான ஒவியங்களை பதுக்கி வைத்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை 11 மணியளவில் திருவையாறு வந்த ஐ.ஜி. பொன் மாணிக்கவேல், அங்கு ரன்வீர்ஷாவுக்கு சொந்தமான அரண்மனையை பார்வையிட்டார். சுமார் அரை மணி நேரம் அங்கிருந்த அவர் பின்னர் புறப்பட்டு சென்றார். திருவையாறு அரண்மனையில், நீதிமன்ற அனுமதி பெற்று ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் பிரிவு போலீசார் சோதனை நடத்துவார்கள் என தெரிகிறது. முன்னதாக ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் தஞ்சை பெரியகோவிலில்நேற்று அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.. சுமார் நான்கரை மணி நேரம் நடைபெற்ற இந்த ஆய்வில், தஞ்சை பெரியகோவிலில் இருந்து பல்வேறு சிலைகள் மாயமாகி இருப்பது  தெரிய வந்துள்ளது. இந்த சிலைகள் .ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புடையவை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Related Posts