ஆர்பிட்டரின் சுற்றுவட்டப்பாதை தொலைவை குறைக்க முயற்சி

விக்ரம் லேண்டரை துல்லியமாக படம் பிடிக்கும் முயற்சியாக, ஆர்பிட்டரின் சுற்றுவட்டப்பாதை தொலைவை குறைக்க இஸ்ரோ ஆலோசித்து வருகிறது.

நிலவின் தரைப் பகுதியில் இருந்து 2.1 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்த போது, லேண்டருடன் தகவல் தொடர்பு திடீரென்று துண்டிக்கப்பட்டது. அதனுடன் தொடர்பை ஏற்படுத்தும் முயற்சியில் விஞ்ஞானிகள் தொடர்ந்து ஈடுபட்டனர். இதற்கிடையே, ஆர்பிட்டர் நிலவுக்கு அருகே தென்துருவ பகுதியில் 100 கிலோ மீட்டர் உயரத்தில் தொடர்ந்து சுற்றி வருகிறது. அதில் ஆய்வு கருவிகளும், நிலவின் தரை பகுதியை துல்லியமாக புகைப்படம் எடுக்கும் சக்திவாய்ந்த கேமராவும் பொருத்தப்பட்டு இருந்தது. அதன் மூலம் விக்ரம் லேண்டர் நிலவின் தரை பகுதியில் விழுந்து கிடப்பதை தெர்மல் இமேஜ் மூலம் ஆர்பிட்டர் கண்டு பிடித்து உள்ளது. நிலவின் மேற்பரப்பில் இருக்கும் விக்ரம் லேண்டரை துல்லியமாக படம் பிடிக்கும் முயற்சியாக, நிலவை சுற்றி வரும் ஆர்பிட்டரின் தொலைவை 50 கிலோ மீட்டராக குறைக்க இஸ்ரோ ஆலோசித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.  இதனிடையே, நிலவில் விழுந்துகிடக்கும் லேண்டரின் ஆயுட்காலத்தில் இரண்டு நாட்கள் முடிந்துவிட்டன. லேண்டர் நொறுங்காமல் இருந்து, அதில் உள்ள சூரிய ஒளி தகடுகள் செயல்பட்டால், இன்னும் 12 நாட்களுக்கு லேண்டருக்கு மின்சாரம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அதற்குள் லேண்டருடன் தொடர்பு ஏற்படுத்தவில்லை என்றால், அதை கண்டுபிடித்தாலும் பயன்கிடைக்காமல் போய்விடும்.

Related Posts