ஆறுமுகசாமி ஆணையம் சிறைச்சாலையில் உள்ள சசிகலாவிடம் விசாரணை

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையம், சிறைச்சாலையில் உள்ள சசிகலாவிடம் விசாரணை நடத்துவதற்கு முடிவு செய்துள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்களும் சர்ச்சைகளும் எழுந்ததால், இதுகுறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், ஜெயலலிதாவின் செயலாளர்கள், உதவியாளர்கள், பாதுகாவலர்கள், கார் ஓட்டுனர்கள்,போயஸ் கார்டனில் வசித்தவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இவர்கள் தவிர, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா,அவரது கணவர் மாதவன், அரசு மருத்துவர் பாலாஜி, இளவரசி மகள் கிருஷ்ணபிரியா, மகன் விவேக், சசிகலாவின் சகோதரர் திவாகரன் உள்பட 130க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் சிலரை ஆணையம் மீண்டும் வரவழைத்து குறுக்கு விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவிடம் நேரில் விசாரணை நடத்த ஆறுமுகசாமி ஆணையம் முடிவு செய்துள்ளது. ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது, அவருடன் 75 நாட்கள் தங்கியிருந்த சசிகலாவிடம் விசாரித்தால் பல்வேறு தகவல்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக ஆணையம் கருதுகிறது. இதையடுத்து சசிகலாவிடம் விசாரணை நடத்த அனுமதி கோரி,  பரப்பன அக்ரஹார சிறை நிர்வாகத்துக்கு ஆறுமுகசாமி ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. இதேபோல் தமிழக உள்துறைக்கும் விசாரணை ஆணையம் கடிதம் அனுப்பி உள்ளது.

Related Posts