ஆளுநரின் எச்சரிக்கையையும் மீறி காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி காஷ்மீர் புறப்பட்டார்

ஆளுநரின் எச்சரிக்கையையும் மீறி காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி,  எதிர்க்கட்சித் தலைவர்களுடன் டெல்லி விமான நிலையத்தில் இருந்து காஷ்மீர் புறப்பட்டு சென்றார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்தை, அண்மையில் ரத்து செய்த மத்திய அரசு, அதனை 2 யூனியன்  பிரதேசங்களாக பிரித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காஷ்மீரில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மத்திய அரசின் நடவடிக்கையை காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி கடுமையாக விமர்சனம் செய்தார்.

இதனையடுத்து, அவரை காஷ்மீருக்கு நேரில் வந்து பார்வையிடுமாறு  அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் அழைப்பு விடுத்தார். இதனையேற்று, இன்று காஷ்மீர் செல்வதாக ராகுல்காந்தி அறிவித்திருந்தார். இதற்கிடையே, ராகுல்காந்தி உள்ளிட்டோர் காஷ்மீர் வரக்கூடாது என ஆளுநர் சத்யபால் மாலிக் எச்சரித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீரில் தற்போது தான் அமைதி திரும்பி வருவதாகவும், ராகுல்காந்தி வந்தால், இயல்பு வாழ்க்கை மீண்டும் பாதிக்கப்படும் என சத்யபால் மாலிக் குறிப்பிட்டுள்ளார். எனினும், காஷ்மீர் ஆளுநரின் எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல் ராகுல் காந்தி சென்றார்.

அவருடன் காங்கிரஸ் தலைவர்கள் குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா, திமுக எம்.பி. திருச்சி சிவா, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் டி.ராஜா மற்றும் மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உள்பட எதிர்க்கட்சி தலைவர்கள் அடங்கிய குழு டெல்லி விமான நிலையத்தில் இருந்து காஷ்மீர் மாநில தலைநகர் ஸ்ரீநகருக்கு புறப்பட்டு சென்றனர்.

Related Posts