ஆளுநர் உத்தரவில் தலையிட முடியாது: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

 

 

நிர்மலாதேவி விவகாரம் குறித்து விசாரிக்க ஆளுநர் நியமித்துள்ள சந்தானம் குழுவுக்கு தடைவிதிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. வேந்தர் என்ற முறையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பிறப்பித்த உத்தரவில் நீதிமன்றம் தலையிட முடியாது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

அருப்புக்கோட்டை கல்லூரியில் பணியாற்றி வந்த பேராசிரியர் நிர்மலா தேவி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து, நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கை தமிழக அரசின் சிபிசிஐடி காவல்துறையினர் மற்றும் தமிழக ஆளுநர் நியமனம் செய்த சந்தானம் குழுவினர் தனித்தனியாக விசாரணை செய்து வருகின்றனர்.

பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக ஆளுநர் நியமித்த சந்தானம் கமிட்டி விசாரணை நடத்துவது செல்லாது என அறிவிக்கக் கோரி சாக்கோ அறக்கட்டளையின் நிர்வாகியும், சமூக ஆர்வலருமான செல்வகோமதி என்பவர் சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் கோவிந்தராஜன், சாமிநாதன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பல்கலைக்கழகத்துக்கு துணை வேந்தரை நியமிக்கும் அதிகாரம் தான் வேந்தரான ஆளுநருக்கு உள்ளது என கூறினார். அந்த வகையில், ஆளுநர் விசாரணைக் கமிட்டி அமைப்பதென்பது சட்டத்துக்கு எதிரானது என்றும், மேலும் பல்கலைக்கழக மானியக்குழுவின் விதிகளின்படியும் விசாரணை குழுக்களை அமைக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்றும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால் இதை ஏற்க மறுத்த நீதிபதிகள் பல்கலைக்கழக துணை வேந்தரை நியமிக்கும் அதிகாரம் உள்ள ஆளுநருக்கு விசாரணைக் கமிட்டியும் அமைக்க அதிகாரம் உள்ளதாக தெரிவித்தனர்.

மேலும் ஆளுநர் விசாரணை கமிட்டி அமைத்துள்ள விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது எனக் கூறி வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர். 

 

Related Posts