ஆஸ்திரேலியாவில் மீட்கப்பட்ட நடராஜர் சிலைக்கு மேள தாளங்கள் மூழங்க உற்சாக வரவேற்பு

ஆஸ்திரேலியாவில் மீட்கப்பட்ட 30 கோடி ரூபாய் மதிப்புள்ள பஞ்சலோக நடராஜர் சிலை சென்னை கொண்டு வரப்பட்டது.

ஆஸ்திரேலியா நாட்டில் இருந்து சிலையை தமிழகத்திற்கு கொண்டு வர சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மத்திய அரசு மூலம் நடவடிக்கை எடுத்தனர்.  அதன்படி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஆஸ்திரேலியா சென்று அந்நாட்டின் அருங்காட்சிய பதிவாளரிடம் இருந்து 700 ஆண்டுகள் பழமையான 30 கோடி ரூபாய் மதிப்பிலான சிலையை பெற்றனர். நடராஜர் சிலை விமானம் மூலம் டெல்லி கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து ரயில் மூலம் சென்னை எடுத்துவரப்பட்டது. நடராஜர் சிலைக்கு மேள தாளங்கள் மூழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் உள்ள குலசேகரமுடையார் திருக்கோயிலில் இருந்து 37 ஆண்டுகளுக்கு முன்பாக ஐம்பொன்னால் ஆன நடராஜர் சிலை திருடப்பட்டது. இதுகுறித்து கல்லிடைக்குறிச்சி போலீசார் கடந்த 1982ம் ஆண்டு வழக்கு பதிவு செய்தனர். ஆனால் திருடப்பட்ட நடராஜர் சிலையை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.  அதைதொடர்ந்து இந்த வழக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக இருந்த பொன்.மாணிக்கவேல்  தலைமையிலான போலீசார் திருடப்பட்ட நடராஜர் சிலை குறித்து விசாரணை நடத்தினர்.  அப்போது, கல்லிடைக்குறிச்சியில் உள்ள குலசேகரமுடையார் கோயிலில் திருடப்பட்ட நடராஜர் சிலை ஆஸ்திரேலியா நாட்டின் அருங்காட்சியகத்தில் இருந்தது தெரியவந்தது. இந்த சிலையை சர்வதேச சிலை கடத்தல் கும்பல் மூலம்  ஆஸ்திரேலியா அரசுக்கு விற்பனை செய்யப்பட்டதும் தெரியவந்தது.

Related Posts