இடைக்காலத் தடை கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பிரபுவுக்கும் பொருந்தும்: சட்டப்பேரவை செயலகம் விளக்கம் 

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகிய மூவரின் மீது பேரவைத் தலைவர் தனபாலிடம் , கொறடா ராஜேந்திரன் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் சட்டமன்ற உறுப்பினர்கள் 3 பேரும் 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கக்கோரி,  அவர்களுக்கு பேரவைத் தலைவர்  நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இதற்கிடையே, பேரவைத் தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர, பேரவை செயலாளரிடம் திமுக மனு அளித்தது. இதைத்தொடர்ந்து பேரவைத் தலைவர் தனபால் அனுப்பிய நோட்டீசுக்கு எதிராக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.  ஆனால் பேரவைத் தலைவர் அனுப்பிய நோட்டீசுக்கு விளக்கம் அளிக்க தயாராக இருப்பதாகவும்  தடை கோரி நீதிமன்றம் செல்ல விருப்பமில்லை எனவும் கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதி உறுப்பினர்பிரபு தெரிவித்திருந்தார். இந்நிலையில்  உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்தபோது பேரவைத் தலைவரின் நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், இன்றுடன் பேரவைத் தலைவர்  அளித்த கால அவகாசம் முடிவடைவதால் பேரவைத் தலைவர் அனுப்பிய நோட்டீசுக்கு விளக்கம் அளிக்க ஒருவார காலம் கூடுதல் அவகாசம் கோரி சட்டமன்ற உறுப்பினர் பிரபு பேரவை செயலாளர் சீனிவாசனிடம் மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தான்சென்றபோது பேரவைத் தலைவர்  இல்லாததால் பேரவை செயலாளர் சீனிவாசனிடம் மனு அளித்ததாகவும், அமமுக என்பது அதிமுகவின் இன்னொரு அணி என விளக்கமளிக்க இருந்த்தாகவும் தெரிவித்தார். . சபாநாயகர் உத்தரவுக்கு தடை விதித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மனுவில்  சுட்டிக்காட்டியுள்ளதாகவும், . மற்ற இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களின்நோட்டீசுக்கு தடை விதித்த உச்சநீதிமன்றத்தின் உத்தரவு தனக்கும் பொருந்தும் என்று நினைப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்நிலையில் பேரவைத் தலைவரின் நோட்டீசுக்கு உச்சநீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடை சட்டமன்ற உறுப்பினர் பிரபுவுக்கும் பொருந்தும்எனவும் அவர் விளக்கம் தர தேவை இல்லை எனவும்  சட்டப்பேரவை செயலகம்  கூறியுள்ளது.

Related Posts