இடைத்தேர்தலை ஒத்திவைக்கக் கோரும் மனுக்கள் விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்

திருவாரூர் இடைத் தேர்தலை ஒத்திவைக்கக் கோரும் மனுக்கள் விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

 திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு வரும் 28-ந் தேதி  இடைத்தேர்தல் நடைபெறுகிறது.  இதில் பதிவாகும் வாக்குகள் 31-ம் தேதி  எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்நிலையில்,திருவாரூர் இடைத்தேர்தலை ஒத்திவைக்க கோரி திருவாரூர் தொகுதியை சேர்ந்த மாரிமுத்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி. ராஜா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அதில், கஜா புயல் காரணமாக திருவாரூர் மாவட்டம் பெரிய சேதத்தை சந்தித்து உள்ளது எனவும் இதிலிருந்து இப்போதுதான் மக்கள் மீண்டும் வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.. இப்போது தேர்தல் நடந்தால் மீட்பு பணிகள் பாதிக்கப்படும் எனவும்,  ஆகவே, தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று இருவரும் தங்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று  உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.. தேர்தல் தொடர்பான வழக்கு என்பதால் இந்த மனுவிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு தெரிவித்துள்ளது. முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, கஜா புயல் காரணமாக பெரும் சேதத்தை சந்தித்துள்ள திருவாரூரில், இப்போது தேர்தல் நடந்தால் மீட்பு பணிகள் பாதிக்கப்படும் எனவும் ,ஆகவே, தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாகவும் கூறினார்.

Related Posts