இது கடுமையான இனப்பாகுபாடு இல்லையா ? ராமதாஸ்

பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் படுகொலை வழக்கில் தொடர்புடையவர்களை விடுதலை செய்ய ஒப்புதல் அளித்துள்ள மத்திய அரசு, ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்ய ஒப்புதல் வழங்காதது ஏன் என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,  சீக்கிய மத குருக்களில் ஒருவரான குருநானக்கின் 550 வது பிறந்தநாளையொட்டி,  550 கைதிகளை விடுதலை செய்ய பஞ்சாப் அரசு உத்தரவிட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். அதில், அம்மாநில முன்னாள் முதலமைச்சர் பியாந்த்சிங் படுகொலை வழக்கில் தூக்குதண்டனை விதிக்கப்பட்ட முதன்மை குற்றவாளி பல்வந்த் சிங் மற்றும் 8 காலிஸ்தான் தீவிரவாதிகளை விடுதலை செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதை கூறியுள்ளார். தடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 9 பேரையும் விடுதலை செய்ய பஞ்சாப் முதலமைச்சர் அம்ரீந்தர் சிங், மத்திய அரசுக்கு விண்ணப்பித்த 14 நாட்களில், உள்துறைஅமைச்சர் அமித்ஷா ஒப்புதல் வழங்கியுள்ளதாக ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார். ஆனால், ராஜீவ் கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேரையும் தமிழக அரசு விடுவிக்க முன்வந்தபோதும், அதற்கு மத்திய அரசு தடை வாங்கியதாக தெரிவித்துள்ள ராமதாஸ், இது கடுமையான இனப்பாகுபாடு இல்லையா என வினவியுள்ளார். முதலமைச்சரை படுகொலை செய்ததை பெருமையாக ஒப்புக்கொண்டவர்களை விடுதலை செய்யும் மத்திய அரசு, காவல்துறை அதிகாரியால் திரித்து எழுதப்பட்ட வாக்குமூலத்தில் அடிப்படையில் தண்டிக்கப்பட்ட 7 தமிழர்களை விடுவிக்க முன்வராதது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். 7 தமிழர்களையும் விடுதலை செய்யக்கோரும் தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று, மகாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாள் விழாவில், அவர்களை விடுதலை செய்ய ஆளுநருக்கு மத்திய அரசு ஆணையிட வேண்டும் என்றும் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Related Posts